1.நாட்டுச் சருக்கம்
ADVERTISEMENTS
1.நாட்டுச் சருக்கம்
சுரமை நாட்டின் சிறப்பு
மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்
இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது
துஞ்சுந்ணணள் ந்தியது சுரமை யென்பவே.
1
ADVERTISEMENTS
கயல்களும் கண்களூம்
பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே.
2
ADVERTISEMENTS
வயல்களும் ஊர்களும்
ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன
தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை
வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.
3
பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை
நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்
பொழிலகம் பூவையுங் கிளீயும் பாடுமே
குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே.
4
வண்டுகளுங் கொங்கைகளும்
காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்
நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்
மேவிநின் றவரையு மெலிய விம்முமே.
5
சுரமை நாட்டின் நானிலவளம்
வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்
தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்
பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
நானிலங் கலந்துபொன்னரலு நாடதே.
6
குறிஞ்சி நிலம்
முன்றி லெங்கு முருகயர் பாணியும்
சென்று வீழரு வித்திர ளோசையும்
வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.
7
முல்லை நிலம்
ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்
கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.
8
மருத நிலம்
அணங்க னாரண வாடல் முழவமும்
கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்
மணங்கொள் வார்முர சும்வய லோதையும்
இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம்.
9
நெய்தல் நிலம்
கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.
10
குறிஞ்சி நிலம்
கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.
11
முல்லை நிலம்
கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்
முன்றி லேறிய முல்லையம் பந்தரும்
நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ
மன்றெ லாமண நாரும ருங்கினே.
12
மருதம்
நாற விண்டன நெய்தலு நாண்மதுச்
சேறு விண்டசெந் தாமரைக் கானமும்
ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்
ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.
13
நெய்தல்
கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
மோடு டைந்தன மூரிக் குவளையும்
தோடு டைந்தன சூகமுங் கற்பகக்
காடு டைந்தன போன்றுள கானலே.
14
குறிஞ்சி
நீல வால வட்டத்தி னிறங்கொளக்
கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்
ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.
15
முல்லை
நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
உக்க தாதடர் கொண்டொலி வண்டறா
எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்
பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.
16
மருதம்
துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு
கள்ள றாதசெந் தாமரைக் கானகத்
துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்
புள்ள றதுபு லம்பின பொய்கையே.
17
நெய்தல்
வெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள்
முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்
டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்
கண்மு ளைத்த தடத்த கழியெலாம்.
18
குறிஞ்சி
காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ
டேந்து சந்தனச் சர லிருங்கைமா
மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்,
19
முல்லை
தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்
கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே.
20
மருதம்
அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்
கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்
உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்
புள்ள லைத்த புனலபு லங்களே.
21
நெய்தல்
கெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய்
முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
கண்டு நின்று கனலும் கழியெலாம்.
22
குறிஞ்சி
கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும்
மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்
எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்
உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.
23
முல்லை
பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்
தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி
சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.
24
மருதம்
மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.
25
நெய்தல்
சங்கு நித்தில முத்தவ ழிப்பியும்
தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம்.
26
திணை மயக்கம் [மலர்]
கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்
இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்
கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே.
27
திணை மயக்கம் [ஒலி]
கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.
28
சுரமை நாட்டின் சிறப்பு
மாக்கொடி மாணையு மெளவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே.
29
2.நகரச் சருக்கம்
சுரமை நாட்டுப் போதனமா நகரம்
சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட
பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே.
30
நகரத்தின் அமைதி
சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த
அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்
நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.
31
அகழியும் மதிலரணும்
செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்
தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்
வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.
32
அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு
இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்
அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற
கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம்
33
மாடங்களின் மாண்பு
மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்
தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங்
கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்
வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே.
34
இதுவுமது - வேறு
அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே.
35
மாடங்களின் சிறப்பு
கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே.
36
மாடத்திற் பலவகை ஒலிகள்
மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல்கலம்
முடிமா ணகரது முரல்வ தொக்குமே
37
வண்டுகளின் மயக்கம்
தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்
மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ
ஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே.
38
கடைத்தெரு
பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.
39
சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்
காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.
40
அரசர் தெருவழகு
விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே.
41
செல்வச் சிறப்பு
கண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும்
வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்
வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே.
42
மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி
தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே.
43
இன்ப உலகம்
மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக
ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.
44
பயாபதி மன்னன் மாண்பு
மற்றமா நகருடை மன்னன் றன்னுயா
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே
45
பயாபதி மன்னன் சிறப்பு
எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.
46
மக்கட்குப் பகையின்மை
நாமவே னரபதி யுலகங் காத்தநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலித தில்லையே.
47
குடிகளை வருத்தி இறை கொள்ளாமை
ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே
மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே.
48
மன்னனின் முந்நிழல்
அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே
வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.
49
இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்
மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால்
தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம்
மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ
50
அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்
மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான்
51
அரசர் சுற்றத்தின் இயல்பு
கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன்
றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா
நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின்
அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே.
52
அரசியர்
மற்றவன் றேவியர் மகர வார்குழைக்
கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார்
இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் முற்றியார்
53
அரசியர் இயல்பு
பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்
செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்
வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம்
அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார்
53
காமம் பூத்த காரிகையர்
காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார்
தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார்.
55
பட்டத்து அரசிகள் இருவர்
ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர்
மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்
சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என்
றேயுரை யிலாதவ ரிருவ ராயினார்
56
பெருந்தேவியர் இருவரின் பெற்றி
நீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும்
ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்
வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள்
57
மங்கையர்க்கரசியராகும் மாண்பு
பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன
தேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார்
மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத்
தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே.
57
இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்
பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்
திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல
இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார்
59
மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்
மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்
இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட்
கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட
முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே
60
மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்
சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி
மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்
பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக்
கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார்.
61
மாலாகி நிற்கும் மன்னன்
மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி
அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான்
செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும்
தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான்
62
முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக்
கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி
மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே.
63
3.குமாரகாலச் சருக்கம்
தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்
ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண்
டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார்
வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல்
ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார்
64
மிகாபதி விசயனைப் பெறுதல்
பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்
கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்
தண்ணிலா வுலகெலாந் தவழந்து வான்கொள
வெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான்
65
சசி திவிட்டனைப் பெறுதல்
ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச்
சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான்
நீரணங் கொளிவளை நிரந்து விம்மின
ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார்
66
விசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்
திசையெலாத் தெளிந்தன தேவர் பொன்னகர்
இசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர்
நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப்
பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே
67
மைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தைக் கவர்தல்
செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று
எய்தினார் குமரராம் பிராய மெய்தலும்
மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்
ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே
68
விசயனுடைய உடல், கண், குஞ்சி,காது
காமரு வலம்புரி கமழு மேனியன்
தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்
தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன்
பூமரு பொலங்குழை புரளுங் காதினன்
69
மாலை,மார்பு , நிறம் ,தோள், நடை ஆகியவை
வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
கோடுயர் குன்றெனக் குலவு தோளினன்
பீடுடை நடையினன் பெரிய நம்பியே
70
திவிட்டனுடய உடல் முதலியன
பூவயம் புதுமலர் புரையு மேனியன்
துவிரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன்
71
கை முதலியன
சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை
தங்கிய வங்கைய னடித்தண் போதினன்
மங்கல மழகளி றனைய செல்கையன்
இங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே
72
இருவரும் இளமை எய்துதல்
திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம்
யுரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார்
73
மைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்குத் தோன்றுதல்
உவர் விளை கடற்கொடிப் பவள மோட்டிய
துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்
அவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர்
கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார்.
74
மங்கையர் மயங்குதல்
கடலொளி மணிவணன் கனவில் வந்தெம
துடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான்
விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென
மடவர லவர்குழா மயக்க முற்றதே
75
நங்கையர் மனத்தில் விசயன்
வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்
கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
ஆர்வளர்த் தவர்கொலென் பருவ மாயினார்
76
மங்கையர் மாட்சி
கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத்
துண்ணிலா வெழுதரு காம வூழெரி
எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே
77
காதல் தீ வளர்க்கும் காளைப் பருவம்
திருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்
உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார்
78
அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்
மற்றொர்நா ளமரிகைக் கொடிகொண் மாமணிச்
சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்
முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்
கொற்றவ னிளையவர் குழைய வைகினான்
79
அரசன் உறங்குதல்
மஞ்சுடை மணிநகு மாலை மண்டபத்
தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப்
பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்
செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான்
80
உடற் பாதுகாப்பாளர்கள்
மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன்
றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
அன்னவ ரடிமுதற் காவ னண்ணிணார்
81
திருப்பள்ளி எழுச்சி
தங்கிய தவழழொளி தடாவி வில்லிட
மங்கல வுழக்கல மருங்கு சேர்ந்தன
அங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன்
பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார்
82
அந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்
அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப்
பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்
செந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட்
டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான்
83
வாயில் காப்போர் உலகு காப்போன் வரவை எதிர்பார்த்தல்
விரையமர் கோதையர் வேணுக் கோலினர்
உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
முரசமர் முழங்கொலி மூரித் தானையன்
அரசவை மண்டப மடைவ தெண்ணினார்
84
அரசன் வாயிலை அடைதல்
பொன்னவிர் திருவடி போற்றி போற்றிஎன்
றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற்
கன்னியர் கவரிகா லெறியக் காவலன்
முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்
85
மெய்க்காப்பாளர் அரசனைக் காத்தல்
மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல்
நஞ்சிவர் வேனர பதியை யாயிடை
வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார்
86
அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்
வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்
எசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய
மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத்
தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான்
87
வேறு - மண்டபத்திற்குள் புகுதல்
பளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி
விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட்
டுளொங்கொளி பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி
வளங்கவின் றனைய தாய மண்டப மலிரப் புக்கான்
88
அரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி
குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும்
அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச்
செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன்
வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த வெய் யவனோ டொத்தான்
89
அரசன் குறிப்பறிந்து அமர்தல்
பூமரு விரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்
மாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார்
ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித்
தாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார்
90
சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்
முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்
மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப்
பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்
மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம்
91
படைத் தலைவர்கள் உடனிருத்தல்
வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார்; வென்றி நீரார்;
எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார்
உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே
92
புலவர்கள் வருதல்
காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்
நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய
பூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப்
பாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே
93
இசைப் புலவர்கள் வாழ்த்து கூறுதல்
பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி
மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்ததின் புகழோ டொன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார்
94
இதுவும் அது
மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற
அஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி
வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற
செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார்
95
வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை
இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்
96
நிமித்திகன் வரவு
ஆயிடை யலகின் மெய்ந்நூ லபவுசென் றடங்கி நின்றான்
சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்
மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ
நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான்
97
அரசன் நிமித்திகனை வரவேற்றல்
ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர்
ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான்
வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால்
ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான்
98
நிமித்திகன் தன் ஆற்றலை காட்டத் தொடங்குதல்
உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக்
கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்
முற்றிய வுலகின் மூன்று காலமூ முழுது நோக்கிக்
கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான்
99
அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்
கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்
நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை
விசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த
தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே
100
கனவின் பயனை நிமித்திகன் கூறுதல்
மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேண்மோ
நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி
மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து
தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான்
101
தூதன் ஒருவன் வருவான் என்றல்
கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித்
திட்பமாஞ் சிலையி னாய்! நீ தெளிகநா னேளு சென்றால்
ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு
புட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான்
102
நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்
என்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச்
சென்றுயர் திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம்
ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்
பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார்
103
அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்
உரையமைந் திருப்ப விப்பா லோதுநா ழிகையொன் றோட
முரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே
அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி
வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான்
104
வேறு - அரசன் பேசுதல்
கங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும்
மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும்
கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த்
தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான்
105
அமைச்சர்கள் பேசுதல்
சூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி
நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்
ஆழியங் கிழவனா யலரு மென்பது
பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே
106
திவிட்டன் சிறந்தவனே என்றல்
நற்றவ முடையனே நம்பி யென்றுபூண்
விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக்
கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய
மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்
107
வேறு - திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்
சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
அங்கை யுள்ளன வையற் காதலால்
சங்க பாணியான் சக்க ராயுதம்
அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே
108
வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்
விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகன்
வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலான்
எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்
அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே
109
பளிங்குமேடை யமைத்துக் காவல் வைப்போம் என்றல்
நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே
110
அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்
என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்
நன்றது பெரிதுமென் றருளி நாடொறும்
சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்
இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான்
111
துருமகாந்தன் பொழிலையடைதல்
எரிபடு விரிசுட ரிலங்கு பூணினான்
திருவடி தொழுதுசெல் துரும காந்தனும்
வரிபடு மதுகர முரல வார்சினைச்
சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான்
112
4.இரதநூபுரச் சருக்கம்
நுதலிப்புகுதல்
புரிசை நீண்மதிற் போதன மாநகர்
அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே
விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்
உரையை யாமுரைப் பானுற நின்றதே
113
வெள்ளிமலை
நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண்
டுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய்
இலகு வின்மணி வானியன் மாடெலாம்
விலக நின்றது விஞ்சையர் குன்றமே
114
தேவர் உடளொளிக்குச் செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்
தொக்க வானவர் சூழ்குழ லாரொடும்
ஒக்க வாங்குள ராய்விளை யாடலால்
உக்க சோதிகள் சோலையி னூடெலாம்
செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே
115
பொழிலில் தார் மணம்
அவிழுங் காதல ராயர மங்கையர்
பவழ வாயமு தம்பரு கிக்களி
தவழு மென்முலை புல்லத் ததைந்ததார்
கமழு நின்றன கற்பகச் சோலையே
116
பொழிலிற் குளிர்ச்சி
கிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம்
வளரும் பூண்முலை யாரொடு வைகலால்
துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம்
நளிருந் தெய்வ நறுங்குளிர் நாற்றமே
117
வாடையின் வருகை
மங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப்
பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்
தங்க ராகம ளாயர மங்கையர்
கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே
118
தழைப் படுக்கை
தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்
கான கத்தழை யின்கமழ் சேக்கை மேல்
ஊன கத்தவர் போகமு வந்தரோ
வான கத்தவர் வைகுவர் வைகலே
119
பாறையில் மகரந்தப்பொடி
மஞ்சு தோய்வரை மைந்தரொ டடிய
அஞ்சி லோதிய ராரள கப்பொடி
பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத்
துஞ்சு பாறைகண் மேற்று தை வுற்றதே
120
பாறையில் அடிக்குறி
மாத ரார்நடை கற்கிய வானிழிந்
தாது வண்டுண வூழடி யூன்றிய
பாத ராகம்ப தித்தப ளிக்கறை
காத லார்தம கண்கவர் கின்றவே
121
அருவிநீரில் மல்லிகை மணம்
ஆகு பொன்னறை மேலரு வித்திரள்
நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா
வேக மும்மத வெள்ளம ளாவிய
போக மல்லிகை நாறும்பு னல்களே
122
சேடி நாட்டின் சிறப்பு
பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்
காக்க ளாவன கற்பகச் சோலைகள்
வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே
லூக்கி யமுரைக் கின்றதிங் கென்கொலோ
123
இரதநூபுரச் சக்கரவாள நகரம்
வரையின் மேன்மதி கோடுற வைகிய
திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமே
லிரத நூபுரச் சக்கர வாளமென்
றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே
124
வேறு -- வாழையின் மாண்பு
அம்பொன் மாலையார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க்
கொம்பா னார் கொடுத்த முத்த நீர வாய கோழரைப்
பைம்பொன் வாழை செம்பொ னேப ழுத்து வீழ்ந்த சோதியால்
வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே
125
பாக்கு மரங்கள்
வேய்தி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப்
பாய்நி ழற்ப சுங்க திர்ப்ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச்
சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப்
போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே
126
மாடங்களும் மரங்களும்
காந்தி நின்ற கற்ப கந்தி ழற்க லந்து கையறப்
பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மோர்செய
வாய்ந்தெ ரிந்த பொன் மாட வாயி லாறு கண்கொளப்
போந்தெ ரிந்த போன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே.
127
இன்பத்திடையே தென்றல்
மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில்
பூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்
வாச முண்ட மாரு தந்தென் வண்டு பாட மாடவாய்
வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே
128
பலவகை மரங்கள்
ஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும்
தாந்து ணர்த்த சந்த னத்த ழைத்த லைத்த டாயின
மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால்
தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே
129
இன்ப துன்பம்
தெய்வ யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்
பெளவ முத்த வார்ம ணற்ப றம்பு மெளவன் மண்டபம்
எவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால்
கவ்வை யாவ தந்த கர்க்கு மார னார்செய் கவ்வையே
130
சுவலனசடி
மற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர் கோன்
அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்
முற்று முன்ச டிப் பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழப்
பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்
131
சுவலனசடியின் பெருமை
இங்கண் ஞால மெல்லை சென்றி லங்கு வெண்கு டைந்நிழல்
வெங்கண் யானை வேந்தி றைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்
கொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய்
அங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான்
132
கல்விநலம் முதலியன
விச்சை யாய முற்றினான் விஞ்சையார்க ளஞ்சநின்
றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக்
கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான்
வெச்ச னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான்
133
அம் மன்னவன்பால் ஒரு குற்றம் - வேறு
வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ
னொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள்
குற்ற மாயதொன் றுண்டு குணங்களா
லற்ற கீழுயிர் மேலரு ளாமையே
134
அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன
செம்பொ னீண்முடி யான்சொரு வின்றலை
வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின
கம்ப மாடக் கதலிகை போதுமே
135
ஆடவர் மேல் வளைந்த வில்
மின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணார்
துன்னு தொன்முடி யானொளி சென்றநாள்
மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன
பொன்னு னார்புரு வச்சிலை போலுமே
136
உண்ணாத வாய்கள்
வெண்ணி லார்ச்சுட ருந்தனி வெண்குடை
எண்ணி லாப்புக ழானினி தாண்டநா
ளுண்ணி லாப்பல வாயுள வாயின
கண்ண னாரொடு காமக்க லங்களே
137
அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்
மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள்
தாக்க ணங்கனை யார் தம தாயரால்
வீக்கப் பட்டன மென்முலை விம்முமே
138
கடியவையுங் கொடியவையும்
வடிய வாளவ னாளவும் வாய்களில்
கடிய வாயின கள்ளவிழ் தேமல
ரடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க்
கொடிய வாயின கொங்கவிழ் சோலையே
139
அரசன் மனைவி வாயுவேகை
மாய மாயநின் றான்வரை மார்பிடை
மேய பூமகள் போல விளங்கினாள்
தூய வாமுறு வற்றுவர் வாயவள்
வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்
140
வாயுவேகையின் மேன்மை
பைம்பொற் பட்ட மணிந்த கொல் யானையான்
அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
அம்பொற் பட்டுடை யாளணி யாயினான்
141
இருவரின் இன்பநிலை
கோவை வாய்குழ லங்குளிர் கொம்பனாள்
காவி வாணெடுங் கண்ணியக் காவலற்
காவி யாயணங் காயமிழ் தாயவன்
மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள்
142
அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்
முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல்
அருக்க கீர்த்தி யென் பானலர் தாரினான்
143
சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்
நாம நள்லொளி வேனம்பி நங்கையா
யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத்
தாம மல்லிகை மாலைச் சயம்பவை
காம வல்லியுங் காமுறத் தோன்றினாள்
144
சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு
கங்கை நீரன ஞான்ற கதிரிளந்
திங்க ளாற்றெழப் பட்டது செக்கர்வான்
மங்கை மார்பிறப் பும்மட மாதரிந்
நங்கை யாற்றெழப் பாடு நவின்றதே
145
முகம் , கண், புருவம், இடை ஆகியவை
வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி
கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்
கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை
உண்டு கொல்லென வுண்டும ருங்குலே
146
புருவங்கள் துவளுதல்
காதின் மீதணி கற்பகத் தொத்திணர்
ஊது தேனிற கூன்றியி ருத்தொறும்
போது தேர்முகத் தும்புரு வக்கொடி
நோத லேகொல்நொ சிந்துள வாங்களே
147
சுயம்பிரபையின் அழகு
விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி
மண்ண ணங்குற வேவளர் வெய்திய
பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ
கன்ன ணங்குறு காரிகை கண்டதே
148
கொங்கு போதரு வான்குமிழ் கின்றன
அங்க ராகம ணிந்ததை யன்றியும்
நங்கை நாகரி கம்பொறை நாண்மதுத்
தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே
149
வளருதல்
மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி
நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்
மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்
கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள்
150
பற்கள் தோன்றுதல்
வாம வாணொடு நோக்கிம டங்கனி
தூம வார்குழ லாடுவர் வாயிடை
நாம நள்லொளி முள்ளெயி றுள்ளெழு
காம னாளரும் பிற்கடி கொண்டவே.
151
சுயம்பிரபை வித்தைகளடைதல்
மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்
அஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய்
விஞ்சை தாம்பணி செய்தல்வி ரும்பினன்
எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே
152
சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்
நங்கை தோன்றிய பின்னகை வேலினாற்
கங்கண் ஞாமல மர்ந்தடி மைத்தொழில்
தங்க நீண்முடி யாற்றலை நின்றனர்
வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே
153
வேறு - வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்
நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து
மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளும்
பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள்
வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள்
154
வேனில் வரவைக் கூறுதல்
தேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன!
பூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்
கோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்
155
வண்டுகள் களிப்பு
வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத்
தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல் வாய் நெகிழ மாந்தித்
தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார்
மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மனிவண் டெல்லாம்
156
இசைக்குப் பரிசில்
கடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமர்
படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக்
கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று
வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே
157
தீயிடத்துக் கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்
அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த்
துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம்
செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி
மஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே
158
வண்டுகள் மயக்கமும் தெளிவும்
அந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி
வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி
கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச்
செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே
159
மாமரமும் மனந்திரிந்த செல்வரும்
மாஞ்சினை கறித்த துண்டந் துவர்த்தலின் மருங்கு நீண்ட
பூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித்
தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும்
தாஞ்சுவை திரிந்த பிஇன்றைச் சார்பவ ரில்லை யன்றே
160
பொழில்கள் புலம்புதல்
கோவைவண் டூது கின்ற குரவெனுங் குரைகொண் மாதர்
பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன்
ஆவிகொண் டிவளிக் கைவிட் டகலுமோ வென்று தத்தம்
பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம்
161
அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்
வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்
கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கி னோவன நண்ணி னானே
162
வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்
கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே
163
மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்
கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே
புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே
164
புகழ் பாடிப் பூவிறைத்தல்
கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி
அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே
165
தென்றல் வீசுதல்
குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்
தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே
166
அரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்
இன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை
மன்னவாந் தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன்
தன்னவா மடவாரைத் தானுவந்து பொழில்காட்டி
மின்னவா மிடைநோவ விளையாட வருளினான்
167
இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது
எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்
வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
168
கைகளும் இடைகளும்
காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்
சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே
வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே
169
மாந்தளிர் முதலியவை
மாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே
ஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே
தேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித்
தாந்தளிர்மென் முருக்கினிய தாதொடு ததைந்தனவே
170
கண்மலர்
காவியுஞ் செங் கழுநீருங் கமலமுங் கண் விரிந்துநளி
வாவியு மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே
தூதுயருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார்
ஆவியுய்ந் துள்ளாராத லரிதேயிவ் விள வேனில்
171
வேறு - அரசன் திருக்கோயிலை அடைதல்
இன்னண மிளையவர் மருள வீண்டுசீர்
மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக்
கன்னவில் புரிசையுட் கடவுட் காக்கிய
பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான்
172
திருக்கதவம் திறத்தல்
உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன்
குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை
வலமுறை வந்தனன் வரலு மாமணிக்
கலமுறை கதிர்நகைக் கபாடம் போழ்ந்ததே
173
சுடர் விளங்குதல்
பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன
மணிநிலை விசும்பொடு வரங்க ளீவன
கணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம்
மணிநிலைச் சுடரொளி மலர்ந்து தோன்றவே
174
அரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்
மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன்
கைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான்
வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன்
செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான்
175
வேறு - வரிப்பாட்டு
எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்
அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்
அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே
176
படைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்
பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்திறை
இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே
இகன்மாற வென்றுயர்ந்த விறைவவென் றறைந்தாலும்
அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே
177
ஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்
திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே
ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும்
அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே
178
வேறு - அரசன் கோயில் வாயிலையடைதல்
இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன்
சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன்
கன்னவி றிருமனிக் கபாடந் தாழுறீஇ
மின்னிய திருநகர் முற்ற முன்னினான்
179
சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்
ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச்
சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்
ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்
சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார்
180
வேறு - வரிப்பாட்டு- அச் சாரணர் இறைவனை ஏத்துதல்
விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
யுண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காத லொழியோமே
181
இதுவுமது
முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்று
யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே
182
இதுவுமது
மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே
183
வேறு - முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீவினை தீர்த்தல்
தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக்
காதலி னெழுவிய காம ரின்னிசை
யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள
வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே
184
சமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்
இறைவனை யின்னண மேத்தித் தந்தொழில்
குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார்
மறமலி மன்னனை நோக்கி மற்றவற்
கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார்
185
சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்
தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும்
என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்
நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்
சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே
186
அரசன் சென்று பணிதல்
வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை
மூன்றில்சேர்ந் திருந்தனர் முனிவ ராதலும்
மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும்
சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான்
187
முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமரச் செய்தல்
பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை
ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்
தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர
ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான்
188
முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன் வணங்குதல்
தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்
நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி
வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்
189
சடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்
முனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன்
றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும்
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனியமற் றின்னணங் கடவுள் கூறினான்
190
தன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரைப் பணிதல்
துன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசா
லின்னுரை யமிழ்தெமக் கீமி னென்பதாம்
மன்னநின் மனத்துள தென்ன மாமணிக்
கன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான்
191
வேறு - சாரணர் அறிவுரை - பிறவிகள் அளவிடற் கரியன என்றல்
மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய
கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தில்
மையுற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை
நெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தென நினைக்க லாமோ
192
நற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்
சூழ்வினை துரப்பச் சென்று சூழ்வினைப் பயத்தினாலே
வீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி
ஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதித்
தாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான்
193
அருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்
காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப்
போதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி
யாதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய்
மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா
194
இரத்தினத் திரயம்
மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
யிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்
195
இரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்
உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயறு நீக்கிச்
சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாங்கிப்
பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்
மற்ரவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா
196
அறிவுரை கேட்டோ ர் மகிழ்ச்சி யடைதல்
அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும்
திருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும்
விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம்
பரிந்தகங் கழுமத் தேறிப் பாவம் பரிந் தவர்க ளொத்தார்
197
அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்
மன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப்
பன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால்
கன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான்
பின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே
198
வேறு - சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்
மன்னவன் மடமகள் வணங்கி மற்றவ
ரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள்
பன்னியொர் நோன்பு மேற் கொண்டு பாங்கினால்
பின்னது முடிப்பதோர் பெருமை யெண்ணினாள்
199
அரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து செல்லுதல்
முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்
பனிமலர் விரவிய படலை மார்பினான்
கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர்
இனிதினின் வலமுறை யெய்தி யேகினான்
200
அரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்
வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில்
காமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர்
தாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர்
நாமவே னரபதி நகர நண்ணினான்
201
சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச் செல்லுதல்
அகநக ரரைசரோ டரைசன் சென்றபின்
சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்
மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப்
பகனகு கடரொளி படர வேகினார்
202
சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல்
அழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக
நிழற்கொடி யதுவென நிறைந்த காரிகைக்
குழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால்
எழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள்
203
மனநலத்தின் மாட்சி
முகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லியல்
நகைத்தவார் குழலவ டன்மை யாயினும்
வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா
வகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே
204
நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்
இந்திர வுலகமும் வணக்கு மீடுடைத்
தந்திர நோன்பொளி தவழத் தையலாள்
மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா
வந்தர வழற்கொடி யனைய ளாயினாள்
205
நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்தல்
தாங்கருஞ் சுடொரொளி சக்கர வாளமென்
றோங்கிரும் பெயர்கொணோன் புயர நோற்றபின்
றீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வதக்
காங்கொரு பெருஞ்சிறப் பயர்தல் மேயினாள்
206
சுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்கல்
தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக்
கண்ணவிர் சென்னிமேற் கடவுட் டானமஃ
தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை
விண்ணவ ருலகமூம் வியப்ப வேத்தினாள்
207
வேறு - வரிப்பாட்டு - சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்
ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங் கிழவனை யொதுங்கிய
சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம்
208
இதுவுமது
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்
209
ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம்
210
வேறு - சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்
கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்
வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்
மருவுடை மொழிகளாற் பரவி வாமன
திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள்
211
சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்
வானுயர் கடவுளை வயங்கு சேவடித்
தேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின்
மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன்
கோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள்
212
சுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டுப் பொருள் கொடுத்தல்
வெஞ்சுடர் வேலவர்க் குணர்த்தி மெல்லவே
பஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுகன்
னஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின்
செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினான்
213
அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்லத் தொடங்குதல்
அல்லியி னரவண் டிரிய வாய்மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை
சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்
214
ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்
தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை
மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே
பூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார்
வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே
215
கங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமா
மங்கணீ ருலகெலா மறியப் பட்டது
நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி
வங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே
216
போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத்
தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல
மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில
மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே
217
வானகத் திளம்பிறை வளர வையகம்
ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே
நானகக் குழலிநீ வளர நங்குடி
தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே
218
கண்பகர் மல்லிகை கமழக் காதலால்
சண்பகத் தனிவனந் தும்பி சாருநீ
பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி
மண்பக ருலகெலா மகிழச் செல்லுமே
219
அரசன் தன் மகளை உண்டற்கு அனுப்புதல்
கொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட்
கிவ்வகை யணியன கூறி யீண்டுநும்
மவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென
மவ்வலங் குழலியை மன்ன னேயினான்
220
கட்டளையும் மகிழ்ச்சியும்
பல்கலம் பெரியன வணியிற் பாவைத
னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே
செல்கவென் றிருமக ளென்று செம்பொனான்
மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான்
221
அரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்
மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்
பெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர்க்
கெண்ணருந் தகைத்தென விறைவ னெண்ணினான்
222
தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்
மையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடிக்
கையணி நெடுநல்வேற் காளை மார்களுள்
நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான்
மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே
223
மங்கையர் இயற்கை
பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
யிலங்கல மென்மை வீயஞ் சேர்த்தினும்
குலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும்
மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ
224
தாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்
அந்தைதா முறுவது கருதி யாருயிர்த்
தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார்
சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே
நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ
225
காமமுங் காதலும்
காதலா லறிவது காமங் காதலே
யேதிலா ருணர்வினா லெண்ண லாவதன்
றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ
லோதினா ருரைவழி யொட்டற் பாலதே
226
அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்
தன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென
வின்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கையே
தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி
தின்னணா மியற்றுகென் றமைச்ச ரேவுவார்
227
அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்
தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை
விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே
228
அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்
மாமலர் நெடுங்கடன் மதலை மாசிலாக்
காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
மேலவ ரொழுக்கமும் வேலை காணுமே
229
உலகம் பலவிதம்
ஒன்றுநன் றென உணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே
230
ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்
அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில
இந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர்
தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே
231
அமைச்சர்களை அழைக்குமாறு கட்டளையிடுதல்
என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்
நின்றநூற் கிழமையி னீதி மாக்களை
யொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்
சென்றவர்க் கருளிது வென்று செப்பினார்
232
5.மந்திரசாலைச் சருக்கம்
அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா
ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்
233
மந்திரசாலையின் அமைப்பு
உள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப்
புள்ளுமல் லாதவும் புகாத நீரது
வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
வள்ளறன் மந்திர சாலை வண்ணமே
234
அரசன் பேசத் தொடங்குதல்
ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்
பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்
வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே
235
வேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்
மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றா
ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே
236
அமைச்சர் மாண்பு
வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்
237
அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே
சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டி
வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனு
மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு
மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே
238
அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்
வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே
தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர்
பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்
பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே
239
அரசன் முகமன் பொழிதல்
அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு
மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே
240
அரசனும் அமைச்சர்களும்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி
அறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்
241
தோள்வலியும் சூழ்ச்சியும்
வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்
ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்
கோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான்
242
சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்
ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்
சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ ன்று மன்றே
யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே
243
சூழ்சியே அரசன் ஆற்றல்
ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே
244
இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்
வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க்
கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை
கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா
மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே
245
சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்
சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை
தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே
246
அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்
எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு
மடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல
வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி
கொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே
247
உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்
மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய
பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை
யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான்
248
அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்
கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்கு
நங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்
தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்
சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே
249
அமச்சர்கள் பதிலுரைத்தல்
இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
யறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே
நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்
250
சச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்
பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்
துணிந்துதன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்ல லுற்றான்
இணந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற
அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே
251
சூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்
பொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந்
தொழிற்கதிர்க் கடவு டோ ன்றச் சூரிய காந்தமென்னும்
எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே
அழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே
252
அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்
கோணைநூற் றடங்க மாட்டக் குணமிலார் குடர்க ணைய
ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே
பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்
பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான்
253
திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்
சூழ்கதிர் தொழுதி மாலைச் சுடர்பிறைக் கடவு டோ ன்றித்
நாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்
வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே
போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய்
254
நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்
கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு
தண்ணளித் தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலே
மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்
விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே
255
பொறுமையின் பெருமை
கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுந்
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே
256
அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்
நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ ?
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்
அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே
257
இதுவுமது
மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்
விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்
கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்
தண்குளிர் கொள்ளு மேனுத் தாமிக வெதும்பு மன்றே
258
அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை
தீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்
மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே
259
அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை
மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
விரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்
260
ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே
திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி
இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்
பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே
261
உலகத்திற்குக் கண்கள் மூன்று
கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்
விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்
எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா
262
இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்
குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்
படிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார்
முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
அடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே
263
அரசர்களைப்போல மக்கள் இலர்
தண்சுடர் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமே
விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல
மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய்
கண்சுடர் கனலச் சீறுங் கமழ்கடாக் களிற்று வேந்தே
264
அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்
அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற்
பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய்
265
விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்
அந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி
இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
தந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான்
266
அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது
மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம்
உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்
அருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய்
இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான்
267
சூழ்ச்சியின் மாண்பு
உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து
விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்
கருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்
எரிதவழ்ந் திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான்
268
இதுவுமது
பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து
மஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்
வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய்
269
செய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்
கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து
முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள்
இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்
கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே
270
செவ்வி கேட்டல்
தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த
பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்கும்
வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை
யான்மகிழ் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான்
271
வேறு - விஞ்சையர் சேடி வண்ணனை
மஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை
விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல
கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்
துஞ்சிய வில்லாத் துறக்க மனைத்தே
272
அது விண்ணுலகத்தைப் போன்றது
மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது
புண்ணிய மில்லார் புகுதற் கரியது
கண்ணிய கற்பகக் கானங் கலந்தது
வின்ணிய லின்பம் விரவிற் றினிதே
273
எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது
எல்லா விருதுவு மீனும் பொழிலின்
தெல்லா நிதியு மியன்ற விடத்தின
தெல்லா வமரர் கணமு மிராப்பகல்
எல்லாப் புலமு நுகர்தற் கினிதே
274
பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன
பொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன
பொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன
பொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன
275
அந்நாட்டுப் பொழில் முதலியன
கானங்க ளாவன கற்பகங் காமுகர்
தானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்
நானங்க ளாவன நாவி நருவிரை
வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ ?
276
மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்
குணிக்கப் படாதன குளிர்புனல் நீத்தம்
கணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம்
பிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால்
277
வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்
ஆங்கதன் மேல வறுபது மாநகர்
தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன
நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்
தோங்கிய சூளா மணியி னொளிர்வது
278
இரத்தின பல்லவம்
மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்
திருத்தின வில்லது செம்பொ னுலகில்
புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே
279
அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது
வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
முளைத்தெழு காம முடிவில ராகித்
திளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம்
களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே
280
அந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்
ஆடவர் கொம்பனை யாரிளை யாரவர்
பாடக மெல்லோர் பரவிய சீறடி
தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோ யவைத்
தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே
281
வருத்தமுள்ள நகர்
சிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த
மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார்
முலைத்தடம் பாய முரிந்து முடவண்
டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே
282
முரிவன பல
வனைத்தன போலும் வளர்ந்த முலையார்
இனைந்துதங் காதல ரின்பக் கனிகள்
கனிந்து களித்தகங் காமங் கலந்துண
முனிந்து புருவ முரிவ பலவே
283
அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்
செவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்
அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்
ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி
மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே
284
அந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது
வளர்வன போலு மருங்குல்க ணோவத்
தளர்வன போல்பவர் தாமக் குழன்மேற்
கிளர்வன போதிள வாசங் கிளைத்துண்
டுளர்வன போதரு மூதை யுளதே
285
அந்நகரத்தே அஞ்சி மறைவன
பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்
செங்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டு
மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்
கஞ்சா வொளிக்கு மயல ததுவே
286
இன்றமிழியற்கை யின்பம்
பாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்
தூசினு ணின்று சொரிமணிக் கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை
மூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம்
287
காதல் தூது
காம விலேகையுங் கற்பக மாலையும்
சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு
தூமக் குழலவர் தூது திரிபவர்
தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய்
288
காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில்
தாமத் தொடையல் பரிந்து தமனிய
வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்
காமக் கடலைக் கலக்குங் கழலவர்
தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே
289
வேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்
பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின்
மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள்
மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா
ளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான்
290
அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது
அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்
பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி
மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே
291
அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்
சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங்
கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலுங்
சுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே
292
அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்
தம்பியர் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன்
வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்
தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய்
293
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார் அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்
படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்
புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே
விடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும்
நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்
294
அமைச்சனும் நிமித்திகனும்
ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல்
கோணை நூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான்
பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
காணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய்
295
அச்சுவக்கிரீவன் தன்மை
தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்
கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான்
பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி
மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா
296
அச்சுவக்கண்டனது தோள்வன்மை
குளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே
களிருநூ றெடுக்க லாகக் கற்றிரள் கடகக் கையால்
ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே
வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார்
297
அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்
முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம்
மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா
செற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே
நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம்
298
சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்
ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித்
தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு
மாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே
தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான்
299
சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்
மற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடு
முற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும்
வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்
கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான்
300
பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்
சுடர்மணி மருங்குற் பைங்கட் சுளிமுகக் களிதல் யானை
யடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித்
தொடர்மணிப் பூணி னாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டே
படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான்
301
வேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்
நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்
மேலா ராயு மேதமை யாலு மிகநல்லான்
தோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்
வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ
302
அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்
தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்!
யானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதே
மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ
ரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன்
303
பிறந்த நாட் குறிப்புக் கூறல்
மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
நானக் கோதை நங்கை பிறந்த நாளானே
வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்
தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார்
304
காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன்
மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயனால்
ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்
தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள்
305
இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்
நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான்
தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான்
எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால்
செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன்
306
என்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றால்
குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய்
நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால்
நின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான்
307
சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்
ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே
ஊழிக் கால மோடின வென்னு முரையாலும்
தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ
சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய்
308
அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்
கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர்
மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதின்
றெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள்
பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம்
309
இரத்தின கண்டன் இளவரசன்
வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான்
ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்
ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய்
310
மன்னன் வினாதல்
அன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால்
என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்
இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே
அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான்
311
சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்
மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்
கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை
மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக்
கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான்
312
வேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்: பவச்சுதன் கூற்று
பவனஞ்சன் மாண்பு
கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்
தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்
பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்
தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான்
313
அமிழ்தபதி நாட்டு வேகரதன்
அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும்
வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார்
விளங்கொளி யுருவத் திண்டோ ள் வேகமா ரதனை யன்றே
இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான்
314
மேகபுரத்துப் பதுமரதன்
வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்
ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்
பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை
ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய்
315
இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்
இலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும்
உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்
அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன்
குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான்
316
கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்
நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும்
திங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல்
அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்
செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய்
317
திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்
சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்
வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா
டேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன்
காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான்
318
சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்
செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்
அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார்
இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்
மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா
319
அச்சுவபுரத்துக் கனக சித்திரன்
அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்
திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்
கருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே
ஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான்
320
சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்
சீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும்
காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த
தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான்
தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான்
321
கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது
கற்றவர் புகழுங் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்
கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்
செற்றவர்ச் செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேது
மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான்
322
இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்
இஞ்சிசூழ் ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச்
சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்
அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்
மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா!
323
எங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க்
கோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை
ஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்
வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான்
324
வேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்
மன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி
துன்னு சேவடி யாற்குச் சுருங்கவே
பன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்
அன்னதே யென்றெல் லார்களு மொட்டினார்
325
சுதசாகரன் என்பவன் சொல்லுதல்
அல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்
வல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய்
மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை
சொல்லி னான்சுத சாகர னென்பவே
326
பவச்சுதன் கூறியது உண்மை என்றல்
ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்
பாழி யாகின்ற திண்டோ ட் பவச்சுதன்
சூழி யானையி னாய் சொலப் பட்டன
ஊழி யாருரை யும்மொத் துள கண்டாய்
327
பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்
ஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம்
பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்
வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்
தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய்
328
அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்
வண்ட வாமுடி மன்னருண் மற்றவன்
தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
துண்டி யானுரைப் பானுறு கின்றது
விண்டு வாழுநர் மேனகு வேலினாய்
329
சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்
போக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்
கேக நாயக னாயினி தாள்பவன்
மேக வாகன னென்றுளன் வீழ்மத
வேக மால்களி றும்மிகு வேலினான்
330
மேகவாகனன் மனைவி மேகமாலினி
நாக மாலைகண் மேனகு வண்டினம்
ஏக மாலைய வாயிசை கைவிடாத்
தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்
மேக மாலினி யென்றுரை மிக்குளாள்
331
அவர்களுடைய மகன் விச்சுவன்
தேவி மற்றவ டெய்வம் வழிபட
மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்
ஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான்
332
விச்சுவன் பெருமை
மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்
குய்யும் வாயி லாணுர்த்திய தோன்றிய
ஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ்
வைய மாயதெல் லாம்வளர் கின்றதே
333
இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்
மங்குல் வானுல காண்டு வரத்தினால்
இங்கு வந்தென னீணண்டளி யீந்தபின்
திங்கள் வானொளி யிற்றிகழ் சோதியாய்த்
தங்கு வானுல கிற்றகை சான்றதே
334
தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த்
தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ
டன்ன னாதலி னாலவன் மேற்பிறர்
என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார்
335
சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்
காம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன்
தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல்
ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும்
தாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ
336
விச்சுவன் தங்கை
நம்பி தங்கை நகைமலர்க் கற்பகக்
கொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள்
அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல்
வம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள்
337
அவளுடைய பெயர் சோதிமாலை
கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு
கீத மாலைய கின்னர வண்டினம்
ஊதி மாலைய வாயுறை யுங்குழல்
சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள்
338
சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்
வெம்பு மால்களி யானை விலக்குநீர்
நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி
அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்
வம்பு சேர்முலை வாரி வளாகமே
339
சுதசாகரன் முடிவுரை
இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்
என்ன வாறு மிகப்பவ ரின்மையால்
அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்
சொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய்
340
சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்
கொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம்
அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி
நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான்
தொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான்
341
எல்லோரையும் விலக்கிக் கூறுதல்
அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்
கெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக்
கண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால்
பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே
342
விச்சுவனை விலக்கிக் கூறுதல்
சூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர மாளும்
தாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்
போழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்ய
தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய்
343
விலக்கியதற்குக் காரணம் காட்டுதல்
மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்
பங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும்
தங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான்
344
விச்சுவன் இயல்பு
மண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும்
பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான்
விண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்
கண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய்
345
மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்
செறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்
அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலை
இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர
உறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான்
346
அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்
பங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்
தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி
செங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை
வெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே
347
இதுவுமது
மந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும்
தந்திரந் துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும்
இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர்
அந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான்
348
ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்
போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்
தீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்
கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம்
349
இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்
அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும்
இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்
செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு
மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே
350
சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்
வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத்
தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும்
ஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகா
காரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான்
351
ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்
ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே
கன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும்
என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாய்
இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான்
352
சதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்
வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட்
கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான்
தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால்
யாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான்
353
சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்
என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி
மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்
சென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன்
நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான்
354
அமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்
இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா
மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா
சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி
அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார்
355
அரசன் அரண்மனையை அடைதல்
மந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்
சுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப
வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச
அந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான்
356
வேறு - நண்பகலாதல்
மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந்
துகுகதிர் மண்டப மொளிர வேறலும்
தொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி
நகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே
357
கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்
தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா
வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன
வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே
358
ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்
மலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்
பலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்
கலிவிழாக் கழுமின கடவுட் டானமே
359
குண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்
மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்
கொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு
வண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே
360
பங்கயத் துகள்படு பழன நீர்த்திரை
மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்
குங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே
361
அங்கவள்வாய்க் கயம்வல ராம்ப றூம்புடைப்
பொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு
கொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன
திங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே
362
மாயிரும் பனித்தடம் படிந்து மையழி
சேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத்
தாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன்
பாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே
363
ஈரணிப்பள்ளி வண்ணனை
சந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந்
தந்தரத் தசைப்பன வால வட்டமு
மெந்திரத் திவலையு மியற்றி யீர்மணல்
பந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார்
364
குருமணித் தாமரைக் கொட்டை சூடிய
திருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்
பருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி
அருமணிக் கொம்பனா ரலர வூட்டினார்
365
பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்
அன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடைப்
பன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்
கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை
மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார்
366
மன்னன் உண்ணுதல்
வாரணி முலையவர் பரவ மன்னவன்
ஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்
தோரணி யின்னிய மிசைத்த வின்பமோ
டாரணி தெரியலா னமிர்த மேயினான்
367
அரசன் தெருவில் நடந்து செல்லுதல்
வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்
வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான்
அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்
கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்
368
அரசன் நடந்து செல்லுதல்
பொன்னலர் மணிக்கழல் புலம்பத் தேனினம்
துள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழ
மன்னவன் னடத்தொறு மகர குண்டலம்
மின்மலர்த் திலங்குவில் விலங்க விட்டவே
369
மெய்காவலர் வேந்தனைச் சூழ்தல்
நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
வையகங் காவலன் மருங்கு சுற்றினார்
370
அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்
சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ
நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்
371
நிமித்திகன் அரசனை வரவேற்றல்
எங்குலம் விளங்கவிக் கருளி வந்தவெங்
கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென
மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்
கங்கலர் கேள்வியா னாசி கூறினான்
372
அரசன் மண்டபத்தை அடைதல்
கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்
விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்
வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்
மண்டப மணித்தல மன்ன னெய்தினான்
373
அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்
தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது
மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்
துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்
குழையவன் குமரிதன் கரும மென்னினான்
374
நிமித்திகன் பேசத் தொடங்குதல்
கனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய
பனைத்திர ளனையதோட் படலை மாலையான்
மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல
நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான்
375
அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்
மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான்
376
தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்
வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்
கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை
மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்
எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே
377
பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
மன்சுலா வகலநின் றலரும் வாளினாய்
378
சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்
ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய
சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்
போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்
மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே
379
சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்
அம்மயி லனையவ டிறத்தி னாரியன்
செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்
மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்
பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான்
380
மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்
முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்
மன்னிய திருமொழி யகத்து மாதராள்
என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்
கன்னவ னாதிமா புராண மோதினான்
381
உலகங்கள் எண்ணிறந்தன என்றல்
மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்
தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்
ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை
ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே
382
உலக அமைப்பு உரைத்தல்
மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது
சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
நந்திய நளிசினை நாவன் மாமரம்
அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே
383
உலகில் உள்ளன
குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்
கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்
வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே
384
மாற்றறு மண்டில மதனு ளூழியால்
ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்
தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது
பாற்றரும் புகழினாய் பரத கண்டமே
385
பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது
மற்றது மணிமய மாகிக் கற்பகம்
பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப்
பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார்
386
போக காலம் கழிதல்
வெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனி
அங்கதிர் வளையமு மாதி யாயின
இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே
387
அருகக் கடவுள் தோற்றம்
ஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய்
388
உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது
ஆரரு டழழுவிய வாழிக் காதியாம்
பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே
389
அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்
அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்
குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான்
புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்
நலங்கிளர் திருமொழி நாத னென்பவே
390
பரதன் என்னும் அரசன்
ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய
வீங்கிய விரிதிரை வேலி காவலன்
ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்
பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே
391
பரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்
ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
பாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்
ஊ ழியா னொளிமல ருருவச் சேவடி
சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்
392
பரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்
கதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்
எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே
393
அருகக் கடவுள் கூறுதல்
என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே
394
முதல் வாசுதேவனை மொழிதல்
மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்
பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
கொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான்
அன்னவன் கேசவர்க் காதி யாகுமே
395
அவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்
கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் கன்னி யேதுவால்
ஆசர வச்சுவக் கிரீவ னாவியும்
தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே
396
பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்
தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்
ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்
சீரணி திருமொழித் தெய்வத் தேவனே
397
அருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்
ஆதியு மந்தமு நடுவு நம்மதே
ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ
காதுவே லரசர்கோக் களிப்புற் றானிது
போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே
398
மாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்
அன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய
கன்னவி விலங்குதோட் காளை யானவன்
மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர்
மன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான்
399
இதுவுமது
திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்
பொருவரு போதன முடைய பூங்கழல்
செருவமர் தோளினான் சிறுவ ராகிய
இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே
400
அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்
கானுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே
401
திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்
ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
வீங்கிய வுவகையன் வேந்த னாயினான்
402
சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்
கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே
403
நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான்
உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
இமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்
சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான்
404
சடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்
இருதிலத் தலைமக னியன்ற நூற்கடல்
திருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச்
சொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென்
றருநிதி வளங்கொணா டாள நல்கினான்
405
அரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்
மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்
அன்னமென் னடையவட் கறியக் கூறினான்
406
மக்கட்பேற்றின் மாண்பு கூறல்
தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே
407
குலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்
தலைமகள் றாடனக் காகச் சாகைய
நிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர்
நலமிகு மக்களா முதியர் தேன்களாக்
குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே
408
நன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்
சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்
காழிநீர் வையகத் தரிய தாவதே
409
நின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்
தகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள்
நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே
துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்
மகளெலாத் திசைகளு மலிர மன்னினாள்
410
மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்
வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி
நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே
411
நீ சிறப்படைந்தாய் எனல்
மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்
றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்
நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்
செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய்
412
சுயம்பிரபையின் பெருமை
மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்
தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென
ஓவினூற் புரோகித னுணர வோதினான்
413
வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்
மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை
ஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக
முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்
தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள்
414
சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்
மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்
மன்னவ ரருளில ராயின் மக்களும்
பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே
415
இதுவும் அது
பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்
முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
அடிகள தருளினா லம்பொன் சாயலிக்
கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்
416
அரசன் இன்புற்றிருத்தல்
திருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி
மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
பருமணிப் பூண்முலை பாய மார்பிடை
அருமணித் தெரியறே னழிய வைகினான்
417
மறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்
மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்
திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான்
418
சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்
வீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்
கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்
தாங்கிய புகழவன் மொழியத் தாரவர்
தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார்
419
பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்
தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்
கையமே யொழிந்தன மனலும் வேலினாய்
செய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்
வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே
420
மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்
கற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக்
குற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான்
மற்றவன் மருசியே யவனை நாம்விடச்
சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே
421
மரீசியைத் தூது அனுப்புதல்
காரியந் துணிந்தவர் மொழியக் காவலன்
மாரியந் தடக்கையான் வருக வென்றொரு
சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்
422
மரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்
மன்னவன் பணியொடு மருசி வானிடை
மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்
துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய
பொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே
423
வண்டினம் களியாட்டயர்தல்
புதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்
பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென
மதுமலர் பொழிதர மழலை வண்டினம்
கதுமல ரினையொடு கலவி யார்த்தவே.
424
6.தூதுவிடு சருக்கம்
பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன
மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே
425
சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்
நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம்
குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம்
426
இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை
எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை
பொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை
427
மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு
வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல்
நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
ஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை
428
கோங்கு முதலியன
குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம்
புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம்
இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே
429
பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு
மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே
430
மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்
அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய
இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா
விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்
பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான்
431
பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்
புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத்
துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா
வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா
இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே
432
விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்
புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்
மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண்
கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின்
அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்
433
மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசி
திகைத்தல்
அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா
மதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட
இதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான்
434
வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்
மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்
புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்
நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல்
மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான்
435
இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ? என்று மரீசி கேட்டல்
அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம்
நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன்
பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான்
436
துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்
நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்
சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா
அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்
உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான்
437
அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்
என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்
தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப்
பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான்
438
தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்
மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான்
439
அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்
மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்
அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்
உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்
நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான்
440
தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்
ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
நீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான்
441
மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச்
சென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர்
பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை
மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான்
442
பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்
பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்
சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
அன்னமென வல்லவென வன்னண நடந்தார்
443
நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண்
444
அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம்
மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல்
445
வண்டுகள் ஒலித்தல்
கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே
446
இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க
முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக்
கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்
கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர்
447
துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம்
பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை
அடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார்
வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார்
448
வண்டுகள் மயக்கம்
பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்
449
சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே
450
கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்
அணங்குர விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்
451
மைந்தர்கள் கலங்கி மெலிதல்
நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்
மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார்
452
வேறு
நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம்
தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்
வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்
காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார்
453
அம்மாதர்களின் தன்மை
இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்
கனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார்
முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார்
454
புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவி
கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி
குலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி
இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே
455
மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்
தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே.
456
வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த
சாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது
காம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே
457
சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்
சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்
வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்
தனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர்
458
தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும்
தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த
காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ
459
மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்
என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்
இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
வென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த
460
வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்
ஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன்
மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங்
கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே
461
மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்
வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்
கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்
சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ
டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார்
462
மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்
தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க
மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ
டுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த்
துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே
463
மரீசிக்கு வேண்டுவன புரிதல்
துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியா
வெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச்
சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி
அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார்
464
மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்
ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்
தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்
சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்
465
மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்
வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்
வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான்
466
வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்
ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்
வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப்
பூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந்
தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான்
467
யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்
செம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்
வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான்
468
விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்
ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம்
தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம்
போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்
வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்
469
விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்
பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்
ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்
சூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும்
மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார்
470
கொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார்
மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்
குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ
வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே
471
கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந்
தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய்
மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்
ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார்
472
தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்
வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக்
கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே
473
விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்
மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்
வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்
சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை
நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே
474
சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார்
வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்
நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே
கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார்
475
பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்
ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்
சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண்
நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார்
476
இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும்
விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்
சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள்
பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்
477
அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா
நிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார்
கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம்
478
பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும்
சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும்
ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்
நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார்
479
மாதர்கள் மயக்கம்
மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ
ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்
480
வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த்
தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்
பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த்
தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார்
481
விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்
கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ
டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்
மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்
தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே
482
விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்
மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல
வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும்
கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்
தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே
483
விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்
செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு
வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்
கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென்
றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே
484
பொழிலின் காட்சி
தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி
கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே
485
பூங்காவின் பொதுக்காட்சி
போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன்
கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ
மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்
தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே
486
தென்றல் வீசுதல்
போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்
மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்
காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே
487
விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்
புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை
மல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்
488
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்
பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்
மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்
விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்
கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான்
489
நீர் எம்மை வணங்குவது ஏன்? என்று விசயன் மரீசியைக் கேட்டல்
ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்
பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான்
நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான்
490
விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்
பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்
நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்
வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்
நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்
491
மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்
வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன்
கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்
மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்
492
மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்
வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந்
தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள
வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்
சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான்
493
விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்
செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ
வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை
நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார்
அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே
494
திங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண்
டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும்
தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்
எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்
495
தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்
இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு
மமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம்
சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்
சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார்
496
மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்
அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார்
497
மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்
கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி
மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்
புதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும்
எதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார்
498
மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை
விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்
வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்
எரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேக
நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார்
499
தெருவிற் செல்லுதல்
வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட
ஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான
நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்
கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார்
500
அரண்மனையின் வாயிலை அடைதல்
தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்
தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார்
ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக்
குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார்
501
பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்
மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டு
கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான்
502
பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்
மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்
தின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக்
கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்
அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான்
503
பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி
வீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும்
காரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி
ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக்
தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன்
504
மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்
அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி
விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்
மலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின்
505
மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்
விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த
எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி
வஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி
506
மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்
நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்
புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா
மகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான்
507
இதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி
போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்
காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்
ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்
தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே
508
அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர்
வல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள்
மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவி
வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ
509
திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்
என்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டு
வென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்
இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்
தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான்
510
மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்
தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்
மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி
வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்
றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான்
511
மருசி சினந்து கூறுவன
முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்
என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம்
அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே
512
பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித்
தேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில்
ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே
மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான்
513
வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச்
சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோ
விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும்
நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ
514
அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்
பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ
வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ
515
அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல்
மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ
இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும்
வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா
516
உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்
வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக
எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான்
517
பயாபதி மன்னன் பதில் உரைத்தல்
ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்
தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா
ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா
தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான்
518
வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்
செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ
டெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ
519
ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு
வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை
காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான்
மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ
520
இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று
முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால்
பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய
துன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான்
521
மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க்
கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா
தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான்
522
விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்
இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி
அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்
523
பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்
கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்
வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்
றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும்
524
விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்
மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100
525
விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்
மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்
பண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை
வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான்
526
மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன்
அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான்
கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான்
527
அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ
விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்
திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான்
528
மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்
ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி
ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று
நீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான்
529
முசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக்
காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்
மாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவி
தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்
530
வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்
போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்
வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான்
531
அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன்
பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்
பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான்
532
அருகக் கடவுள் வணக்கம்
அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி
உலகெலாம் நின்று னொளித்தாயு நீயே
ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா
யளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே
533
அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே
534
நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்
குறைதலி லின்பங் கொடுப்பயு நீயே
கொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய்
விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே
535
நமிபாடிய இசையின் தன்மை
என்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா
நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா
மன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே
536
நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்
மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்
குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்
கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு
பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே
537
நமியை வணங்குதல்
பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி
மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்
தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்
மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான்
538
நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை
தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்
தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்
பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா
வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே
539
ஆதிசேடன் நமியரசனை வினவுதல்
மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித்
தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போ
லீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்
வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே
540
நமியரசன் விடையிறுத்தல்
பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
துண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளா
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான்
541
ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்
இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும்
வீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்
நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த
னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே
542
நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்
ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா
யோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயு
மீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி
னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான்
543
பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்
தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி
னுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே
எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு
பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான்
544
அங்கனிமித்திகன் கூறுதல்
யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த
தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான
ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம்
545
மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்
சுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக்
கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே
கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம்
546
வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்
கொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான்
இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து
கடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்
முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால்
547
கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்
விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக்
கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித்
திண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான்
548
வாகுவலியின் தவநிலைமை
கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்
தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்
பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்
குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம்
549
அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்
கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல
மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்
திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ
550
வெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி
விண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி
உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்
கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்
551
அடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில்
தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன்
552
புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று
மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த
வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான்
553
வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்
ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித்
தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்
கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை
ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான்
554
வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்
எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்
அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற
இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான்
555
மருசி மேலுங் கூறத்தொடங்குதல்
குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்
பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்
கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான்
556
வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்
இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான்
557
மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப்
பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்
முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்
டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான்
558
அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்
மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்
சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா
அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட
எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்
559
சிறந்த தூதுவன் சிறப்பு
ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான்
தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா
மேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்
கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான்
560
பயாபதி மரிசியைப் பாராட்டல்
மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்
561
பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்
இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா
ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே
வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா
நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ
562
கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை
உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே
அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்
மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்
563
மருசிக்குச் சிறப்புச் செய்தல்
தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல்
ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப்
போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச்
சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான்
564
மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்
அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ
டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப்
பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று
மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான்
565
மருசி தனது நகரத்தை அடைதல்
உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்
சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்
குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு
நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே
566
முதல் பாகம்